வாழ்நாள் முழுவதும் எந்த கஷ்டமும் இல்லாமல் வாழக்கூடிய அதிர்ஷ்டமான மனிதர் என இதுவரை ஒருவரையும் கடவுள் படைக்கவில்லை. கடவுளின் அவதாரங்களாக சொல்லப்படும் ராமர், கிருஷ்ணர் போன்றோரின் ஜாதகங்களும் தோஷங்களுடன்தான் இருக்கும். மனிதர்கள் செய்த கர்மவினைப்படிதான் வாழ்க்கை அமையும். பூமியில் தோஷங்களற்ற ஜாதகம் என எவருக்கும் கிடையாது.

ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ஆட்சி, உச்சம் பெற்றாலும், கிரகங்கள் நிற்கும் இடத்தைப் பொருத்து தோஷம் உண்டாகி பலவித கஷ்டத்தைத் தரும். சிலருக்கு கிரகங்கள் கெட்டு பகை, நீசமானாலும், அது பங்கமாகி விபரீத ராஜயோகத்தால் சுகபோக வாழ்க்கை கிடைத்து விடுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் சில குறிப்பிட்ட கிரகச் சேர்க்கை, கிரகப் பார்வை, கிரக வரிசையை அடிப்படையாகக் கொண்டு சிலவற்றை யோகங்களாகவும், தோஷங் களாகவும் வகைப்படுத்துகிறோம்.

அதன்படியே பெரும்பாலான ஜாதகர்களுக்கு பலன்கள் பொருந்திப் போகும். ஆனால் அபூர்வமாக வெகுசிலருக்கு தோஷங்கள் இருந்தும் கெடுபலன் நடைபெறாமல் யோகத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும். ஆதலால் ஜோதிடரின் கணிப்பில் அல்லது ஜாதகத்தில் ஏதேனும் பிழை இருக்குமோ என ஜோதிடர்களையே குழப்பி, ஜோதிட சாஸ்திர விதியை மீறி கிடைக்கும் சுபப் பலன்கள் ஆச்சரியத்தைத் தரும்.

Advertisment

குறிப்பாக, கஷ்டங்களை அதிகம் தரவேண்டிய 6, 8, 12-ஆம் அதிபதி தசை, பாதகாதிபதி, மார காதிபதி என அவயோக தசைகள், ஏழரைச்சனி, அர்தாஷ்டமச்சனி, கண்டச்சனி, அஷ்டமச்சனி காலகட்டத்தில் திடீர் அதிஷ்டம், புகழ், முன்னேற்றம் என அபூர்வமாக ராஜயோகப்பலன்களை சிலருக்கு மட்டும் அள்ளித் தந்துவிடுகிறது.

இல்லறம்

குடும்பத்தில் இல்லறம் இனிதாக இருக்கவேண்டுமானால் முதலில் வாழ்க்கைத்துணை சரியாக அமைய வேண்டும். இல்லற வாழ்க்கை இனிதாக அமைய முக்கியமாக, இரண்டா மிடமாகிய குடும்ப ஸ்தானம், ஐந்தா மிடமாகிய புத்திர பாக்ய ஸ்தானம், ஏழாமிடமாகிய களத்திர ஸ்தானம் சுபவலுப் பெறவேண்டும். சுபகிரகப் பார்வை, இணைவு, சுப தசைகள் நிம்மதியான வாழ்க்கை தரும். தீயகிரகப் பார்வை, சேர்க்கை இல்லற வாழ்க்கையைக் கெடுத்துவிடும். களத்திர ஸ்தானம் கெட்டுவிட்டால் பிடிக்காத திருமணம்,சோம்பேறி, உழைக்க மறுத்தல், எப்போதும் காரணமின்றி சண்டை போடுதல், நோயாளி, சந்தேகப்பேர்வழி, செலவாளி, கடனாளி என எந்த நல்ல குணம், பழக்கவழக்கம் இல்லா திருத்தல் போன்ற வரன் அமைந்து நோகடிக்கும்.

Advertisment

சிலருக்கு நல்ல முறையில் வரன் அமைந் தாலும் களத்திர ஸ்தானம் கெட்டால் உடனிருந்து வாழமுடியாதபடி வெளி நாட்டில் வேலை பார்ப்பது, திடீர் பிரிவு, கண்டத்தால் துணையை இழந்து கஷ்டப்பட வேண்டிய சூழல் அமைந்துவிடும்.

tt

களத்திர தோஷம்

பருவ வயதில் யாரையும் காதலிக்காமல் ஒழுக்கமாக இருந்து,செவ்வாய் தோஷம், நாகதோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், பிதுர் தோஷம் என ஜோதிடர் சொன்ன அத்தனைக்கும் பரிகாரம் செய்து, பெற்றோர் விருப்பப்பட்ட வரனுக்கு சம்மதித்து, பொருத்தம் பார்த்து, சுப முகூர்த்த நாள் பார்த்து, ஊர் போற்ற முறைப்படி திருமணம் செய்தவர்களுக்கு, திடீரென்று திருமண வாழ்க்கையில் எதிர்பாரத பிரிவு, இழப்பு, குழந்தையின்மை, வருமான இழப்பு, தொழில் பாதிப்பு என கடனாளி யாக்கி வாழ்க்கையை நரகமாக்கி விடுகிறது.

பெற்றோர், உற்றார், உறவினர் என யாரையும் மதிக்காமல், குடும்ப கௌரவம் பற்றிய கவலையின்றி இஷ்டபடி, சுய நலமாய் ஓடிப்போய் திருமணம் செய்தவர்கள், காதல் என ஊர் ஊராய்ச் சுற்றி கற்பைத் தொலைத்து, கர்ப்பமாகி, கலைத்து, மீண்டும் வேறொரு வரைத் திருமணம் செய்தவர்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறந்து, கணவரின் அன்புடன், நல்ல வருமானத்தால் அனைத்து வசதியுடனும் மகிழ்ச்சியுடனும் சிலர் வாழ் கிறார்கள்.

அபூர்வப் பரிகாரம்

ஜோதிடப்படி ஜாதகத்தில் கெட்ட பலன்கள் நடக்க நிறைய காரணங்கள் சொல் கிறார்கள். தோஷ ஜாதகத்தில் கெட்ட தசாபுக்திகள் நடந் தாலும் கணிப்புகள் தவறி நன்மையே நடப் பதை ஆச்சரியமாகப் பார்க் கிறார்கள். கெடுப லன்கள் மாறுவதற்கு வாழ்க்கையில் நடக்கும் சமூகத்திற்கு முரண்பாடான செயல்களும் காரணமாகின்றன களத்திர தோஷம் இருப்பவர்களுக்கு ஏழரைச் சனி, அஷ்டமச்சனி போன்ற சனி பாதிப்பு காலத்தில் ஜாதகருக்கும் களத்திரத் திற்கும் விபத்து,நோயால் ஆயுள் தோஷம் ஏற்படவேண்டும். ஆனால், அப்படி எந்த கெடுபலனும் நடக்காமல் வீடு, வாகன யோகம், திடீர் பொருளாதார உயர்வு, பணம், புகழ் அதிர்ஷ்டமாகக் கிடைக்கத் தொடங்கும். காரணம் ஜாதகர் அல்லது ஜாதகரின் குடும்பத்தில் யாராவது மறை முகமாக முறையற்ற தொடர்பு வைத்துக் கொள்ளத் தொடங்கியிருப்பர்.

செவ்வாய் தோஷம், நாக தோஷத்தால் திருமணம் தாமதமாகி வெறுத்திருக்கும் போது, திடீர்க் காதல் ஏற்பட்டு சந்தோஷத் தைத் தந்து சில நாட்களிலேயே தோல்வியைத் தந்துவிடும். பிரிவால் ஏற்படும் மன வேதனை தோஷத்திற்குப் பரிகாரமாக மாறி நல்ல வரனை அமைத்துத் தருகிறது. களத் திரமாக எண்ணிப் பிரிந்ததால் தோஷ நிவர்த்தியாகிவிடுகிறது.

ஏழாமிடத்தில் ராகு, சனி, சுக்கிரன் பார்வை, இணைவானது, களத்திர நஷ்டத்தை காதலுடன் நிவர்த்தி செய்துவிடுகிறது.

செவ்வாய், சனி, ராகு பார்வை, இணைவு, ராகு, கேது, செவ்வாய், சூரியன் என்கிற தீய கிரக சம்பந்தமானது, பெண்களுக்கு திருமணத் திற்கு முன்பே ஆண் நட்பு, தொடர்பைக் கொடுத்துக் கெடுத்துவிடுகிறது.

கடுமையான களத்திர தோஷம் கொண்ட வர்களுக்கு திருமணமானவருடன் கணவன், மனைவிபோல் சில மாதம், வருடங்கள் வாழ்ந்து ஏதோ காரணத்தால் பிரிவு நடை பெறுகிறது. பின் குடும்பத்தாரின் கட்டாயம், சம்மதத்துடன் புதியவருடன் நல்ல குடும்ப வாழ்க்கை கிடைக்கிறது.

இத்தகைய முறையற்ற உறவால் ஆரம் பத்தில் வேதனை தந்தாலும் அதுவே அபூர்வப் பரிகாரமாகி அதிர்ஷ்டத் திற்குக் காரணமாகிறது. நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தும் புத்திர தோஷத்தால் குழந்தை பாக்கியமின்றி தவிப்பவர்கள் இருக்கும்போது, புத்திர தோஷம் கொண்ட சிலருக்கு திருமணத் திற்கு முன்பே தொடர்பு ஏற்பட்டு கரு உருவாகி பிரச்சினையால் கரு கலைப்பு நிகழ்ந்து, முதல் தார வாழ்க்கை மறைக்கப்பட்டு, புதியவருடன் யோகமான வாழ்க்கை கிடைத்து, தோஷம் நீங்கி ஆரோக்கியமான அறிவான குழந்தை பெற்று வாழ்வதும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. இப்படிப் பட்ட அமைப்பு வெகு சிலருக்கு தானாக அமையும்..

களத்திர ஸ்தானம் ஏழாமிடத்தைவிட இரண்டாம் தார ஸ்தானமான பதினொன்றாம் இடம் வலுத்திருந்தால் மனை வியைவிட இரண்டாம் தாரமாக எண்ணும் நபரால் அதிஷ்டம், புகழ் கிடைக்கும்.

தொழில் தோஷம்

பத்தாமிடம் சுபத்தன்மையுடன் சுபகிரகப் பார்வை பெற்றால் நேர்மையாக தொழில் செய்வர். இரண்டாமிடம், ஏழாமிடம் நல்ல வியாபாரக் கூட்டாளி யைத் தரும். ஆனால் பதினொன்றாம் இடம் கெட்டுவிட்டால் லாபம் கிடைக்காமல் அவதிப்படுவர். இதனால் நட்பு பாதிக்கும். ஏழரைச்சனிக் காலத்தில் தொழிலால் நன்மை பெறமுடியாமல் தவிப்பர்.

ஆனால் சிலருக்கு அரசாங்கத்திற்குப் புறம்பான தொழில் செய்து லாபம் பெறும் நிலையை ஏழரைச் சனி மறைமுகமாகத் தருவார். முதலீடு செய்து, முறையாகத் தொழில் செய்து நட்டப்பட்ட சிலர், முதலீடில்லாமல் தரகு வேலையால் பலன் பெறுவது ஒருவகை தொழில் தோஷ நிவர்த்தியாகும். தொழில் ஸ்தா னத்துடன் செவ்வாய், சனி தொடர்பு முறையற்ற தொழிலையும், ராகு, கேது, சுக்கிர தொடர்பு திடீர் அதிஷ்டத்தால் தொழில் மேன்மையையும் முறையற்ற வகையில் செய்யும். சிலர் வியாபாரம் நஷ்டப்பட்டு கடனால் ஊரைவிட்டு மறைமுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது, தடை செய்யப் பட்ட பொருட்களை மாற்றிவிடுவது, கீழ்நிலைத் தொழில், இழிவான தரகு வேலைகளில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டி பின் வள்ளல் என்கிற நிலைக்குச் செல்ல பாவத் தொழில்கள் கைகொடுக்கும். 6, 8, 12-ஆம் அதிபதி தசைகளில் முறையற்ற பெண்களாலும், உறவாலும் முன்னேறிய சிலர் மக்கள் போற்றும் தலைவராக் கப்படுகிறார்கள்.

சூழ்நிலையால் தவறான பாதைக்குச் சென்ற பெண்களுக்கு மறுவாழ்வு தருவது, சூரியன் செவ்வாய், சுக்கிரன், ராகு பதினொன் றாம் இடத்துடன் தொடர்பு ஏற்படும்போது விதவைப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட பின் அதிஷ்டம் உண்டாகும்.

அபூர்வப் பரிகார யோகம் எல்லாருக்கும் அதிர்ஷ்டம் தருவதில்லை. பாவகிரகங்கள் பாவத்தன்மை அடைந்து மறைவிடத் திலிருந்து, மறைவிட தசாபுக்திகள் பாதிக்கப் பட்டால் ஜாதகருக்கு அதன் தசையில் கோடீஸ்வர யோகத்தையும் புது வாழ்வையும் தரும். அன்றாடம் சாப் பாட்டுக்கே இல்லை என்கிற நிலையில் வாழும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டு குழந்தைக்காக உயிர் வாழும் பெண்கள், வழிகாட்டுதலின்றி கைவிடப்பட்ட கைம்பெண் களுக்கு உதவும் நோக்கில் தொடர்பு கொள்ப வருக்கு அதிர்ஷ்டம் ஏற்படக் காரணம், பசித்தோர்க்கு உணவிடும் தர்மகர்மாதிபதி யோகத்தால் மறைமுக, முறையற்ற புதிய உறவு அதிஷ்டம் தந்துவிடுகிறது.

பரிகாரம்:

முறையற்ற உறவுகளால் முன்னேற்றம் எல்லாருக்கும் அமையாது. யாருக்கு எதனால் எப்படி நடக்க வேண்டும் என்பது ஜாதகரின் பூர்வபுண்ணிய தர்மகர்ம விதிப்படி தானாக நடைபெறும். ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தாலும் அவரவருக்கு நடப்பதை ஏற்றுக்கொண்டு வாழ்வதைத் தவிர மனிதர்களுக்கு வேறு வழியே இல்லை என்பதே நிதர்சன உண்மை. பிறரைப் போல வாழவேண்டும் என்கிற பேராசையை விட்டு, பிறருக்கும் கொடுத்து நாமும் நாமாக வாழ்ந்தால் அனைத்து அதிர்ஷ்டங்களும் தேடிவரும்.

செல்: 96003 53748